சென்னை:திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிசம்பர் 28ஆம் தேதி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ முன்னதாக அறிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் இன்று(டிச.14) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது, "ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தொடர்பாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகள் கடந்தப் பின்னரும் நிறைவேற்றுவது குறித்து எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை.
ஜாக்டோ ஜியோ பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டப் போது, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மௌனம் காத்து வருகிறது. ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளது. அரசு துறைகளில் Outsourcing முறையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை அங்கன்வாடி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்" என்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.