கோட்டையை முற்றுகையிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது சென்னை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இவர்களின் கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடதக்கது.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வட்டார மற்றும் மாவட்ட அளவில் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். கனமழை காரணமாக முற்றுகை போராட்டத்தை டிசம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு அனுமதி இல்லாமல், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு தலைமைச் செயலகத்திற்கு அழைத்துs சென்றனர். அங்கு தலைமைச் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளிவிட்டு, ஆசிரியர்கள் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுப்பட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:அந்த பையன புடிங்க.. சட்டம் ஒரு இருட்டறையின் மூலம் விஜயகாந்த் மிளிர்ந்தது எப்படி?