சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்தி ராஜன் மற்றும் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன் மற்றும் ஆ.செல்வம் ஆகியோர், “கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு நேரில் வந்து, புதிய ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர், கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இதுவரை அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசும் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல் அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்தவுடன் அறிவிக்காமல், ஆறு மாதகாலம் தாழ்த்தி அறிவிப்பதைக் கைவிட்டு, உடனடியாக நிலுவையுடன் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசுத் துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அட்டை கூலிகளாக மாற்றும் அரசாணை 115 ,139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட்டுத் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக ஜனவரி 5ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.