தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்கு எதிராக 4 கட்ட போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ; முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது என்ன? - அங்கன்வாடி ஊழியர்கள் ஊழியர்கள்

JACTO GEO protest: அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, நவம்பர் 1ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உட்பட தொடர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

4 கட்ட போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ
4 கட்ட போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:42 PM IST

Updated : Oct 31, 2023, 10:00 PM IST

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைத்து அரசுத்துறை பணியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என சுமார் 10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது ஜாக்டோ ஜியோ.

அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் இணக்கமான பாலமாக, அரசாங்கத்தின் திட்டங்களை பொதுமக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்கும் ஓடமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்களும், பணியாளர்களும். அடுத்த தலைமுறைக்கான தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகத்தையே நிர்ணயிக்கும் தலைவர்களை, அறிவுசார்ந்த சமுதாயத்தை வகுப்பறைகளில் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத சமுதாய மேம்பாடு, பெண்களுக்கான உரிமை போன்றவை, சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் மேற்கொண்ட முன்னெடுப்புகளே காரணம். இந்த நிலை தொடர வேண்டுமானால், அனைத்து துறைகள், அனைத்துத் தொழில்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியால் மட்டும்தான் முடியும்.

கார்ப்பரேட் மயம், தனியார் மயம் போன்றவற்றினால் உலகத்தில் எந்த நாடும் முன்னேற்றம் அடைந்ததாகவோ பொருளாதார வளர்ச்சி கண்டதாகவோ வரலாறு இல்லை. மாறாக பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை, பசி, பட்டினி, பஞ்சம் என உலகின் பல நாடுகளும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் சிக்கித் தவித்து சீரழிந்து வருவதைப் பார்க்கிறோம்.

பெயரளவிற்கான திட்டமாக மாறமல் இருக்க:தமிழ்நாட்டில் அரசின் திட்டங்கள் எல்லாம் வெறும் பெயரளவில் உள்ள திட்டங்களாக மாறிவிடாமல் இருக்க வேண்டுமானால், அவற்றை அதன் கடைசி பயனாளிக்கும் கொண்டுசென்று சேர்க்கும் ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அவற்றை தனியார் மூலமாக செய்ய முனைவது மக்களுக்கு முழுப்பலனை அளிக்காது.

தனியார்வசம் என்பதே லாபநோக்கை அடிப்படையாக கொண்டதாகும். அதில் மக்கள் நலன், சமூக நலன் போன்றவற்றிற்கு ஒரு துளி கூட இடமிருக்காது என்பதை தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் அறியாதவர்கள் இல்லை. இத்தகைய திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்கும் துாதுவர்களாக அரசுத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் முழுமையாக செய்து வந்தார்கள். அது தொடர வேண்டும்.

நிரப்பப்படாத காலிப்பணியிடம்:அரசுத்துறைகளில் பள்ளிகளில் கல்லூரிகளில் லட்சணக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது. அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரிரியர்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்த சமுதாயத்தின் பிரச்னை. காலியாக விடப்பட்டிருக்கும் ஒவ்வொரு இடமும் ஒரு குடும்பத்தின் பசியை போக்கவல்லது.

வெளிமுகமை மூலம் அரசுப்பணிகளை செய்யப் பணிப்பது என்பது கூலி முறையை அமல் படுத்துவதாகும். இதன்மூலம் நம் சமுதாயத்தில் நாம் போராடிப்பெற்று காத்து வந்த இட ஒதுக்கீட்டு முறையும் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. இதற்காகத்தான் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அரசுப் பணியாளர்களும் கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எதிர்கட்சித் தலைவராக நம்பிக்கை அளித்தவர்:திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட முதலமைச்சர் எங்களின் உணர்வுகளை, உரிமைகளை, அவை கொடுக்கப்பட வேண்டியதன் நியாயங்களை நன்கு அறிந்தவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் நாங்கள் நடத்திய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் மாநாடுகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும், நீண்டகால வாழ்வாதார பிரச்னைகளுக்காகவும், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் குரல் கொடுத்து எங்களின் நம்பிக்கை நாயகராக இருந்தார்.

மேலும் எங்களின் நம்பிக்கைகள் மேலும் உறுதிபடும்வகைகளில் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்படும் என்றும், குறிப்பாக புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அவர் சொன்ன சொல் காப்பவர் என்ற திடமான நம்பிக்கையின் பேரில் நாங்களும் எங்கள் குடும்பத்தாரும், உறவினரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்க பெரும்பாங்காற்றினோம். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளில் எதையும் முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்கள், நடைமுறையில் இருந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகும்கூட, தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சரின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கைகள் மெல்லத் தகர்ந்து வரும் சூழ்நிலையில், நாங்கள் எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஜனநாயகம் அனுமதித்துள்ள போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க வேண்டிய முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டங்கள்:மேலும் அந்த கடிதத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டக்குழு அறிவித்துள்ள இயக்கங்களை நடத்திடுவதற்கு ஆயத்தமாகி வருவதாக கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில், நவம்பர் 1ஆம் மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்படப் போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம், நவம்பர் 25ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம், டிசம்பர் 28 லட்சக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப்பணியாளர் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

வலியுறுத்தப்பட உள்ள கோரிக்கைகள்:மேலும் அக்கடிதத்தில், தீர்க்கப்படாமல் உள்ள தங்கள் கோரிக்கைகள், குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறிப்பிட்டு இருந்தனர். அவை,

  1. ஏப்ரல் 04, 2003ஆம் ஆண்டிற்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
  2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  3. இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தைைமயாசிரியர் களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
  4. முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள். களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.
  5. கல்லுாரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும்.
  6. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
  7. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
  8. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
  9. அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  10. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  11. 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
  12. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
  13. உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.

மேலும், தமிழக முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், போராட்டக் குழுவினரை உடனடியாக அழைத்து வாழ்வாதார கோரிக்கைகள் சார்ந்தாவது பேசி முடிவெடுத்து அறிவிக்க விட வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் அணிலை பிடிக்க அட்ராசிட்டி செய்த பெண்… தேனியில் சுவாரஸ்யம்!

Last Updated : Oct 31, 2023, 10:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details