சென்னையில் கடந்த 14 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் சென்னை: நேப்பியர் பாலம் கூவம் ஆற்றின் முகத்துவராப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணியின்போது அங்கு தேங்கி உள்ள குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆனையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "முதலில், நான் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 20,000 பணியாளர்கள் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதன் பிறகு வந்த திடக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, சராசரியாக சென்னை மாநகராட்சியில் தினமும் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த 14 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.
சென்னையில் நாம் பார்த்தால் எண்ணூர், மெரினா, அடையாறு, கோவளம் என 4 பகுதிகளில் மட்டும்தான் முகத்துவாரங்கள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், கடலில் சேறும், குப்பைகளும் இந்த பகுதிகளில் வந்து சேருகின்றன.
இதைத் தொடர்ந்து, சென்னையில் 33 குறு வாய்க்கால்கள், 14 கால்வாய்கள் மற்றும் அடையாறு கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவை உள்ளன. இந்த நீர் வழித்தடங்களில், மக்கள் அதிக அளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் முகத்துவார பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக், செருப்புகள், டர்மாக்கோல்கள், ஹெல்மேட் போன்றவை காணப்படுகின்றன.
மேலும், மக்கள் அனைவருக்கும் "இது என் குப்பை நான் குப்பை தொட்டியில்தான் போடுவேன்" என்ற சமூக அக்கறை வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எண்ணூர் எண்ணைய் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டாலும், அங்கிருக்கும் பல்லுயிரிகள் நலனை குறித்து கலந்து ஆலோசிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. அடுத்தது என்ன?