சென்னை:தமிழக வனத்துறையில், கடந்த 1981ஆம் ஆண்டு பிளாட் வாட்சராக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் என்பவர், 2003இல் பணி நிரந்தரம் செய்யபட்டு, 2015இல் ஓய்வு பெற்றார். பணி நிரந்தரம் செய்யும் முன், 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையிலான தனது பணிக் காலத்தை கருத்தில் கொண்டு பென்ஷன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணி நிரந்தரத்திற்கு முன் அவரது பணிக் காலத்தை கருத்தில் கொண்டு பென்ஷன் வழங்க 2015இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 2015இல் மேல்முறையீடு செய்யபட்டது.
2019இல் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016ஆம் ஆண்டிலேயே மனுதாரரருக்கு நிவாரணம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு கொண்ட செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். அதேநேரம், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீது ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த பிறகு மேல்முறையீடு செய்தால், தேவையில்லாத வழக்குகளை தவிர்க்க முடியும். அவை ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருப்பதும் தவிர்க்கப்படும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பு.. தாசில்தாருக்கு நோட்டீஸ்.. மாவட்ட ஆட்சியர் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!