சென்னை: கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியில் நடிகர் விஷாலின் ரசிகர் மன்றமான மக்கள் நல இயக்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து நடிகர் விஷால் பெண்களுக்கு சேலைகளை வழங்கியதோடு அப்பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், அப்பகுதி மக்கள் நடிகர் விஷாலுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள். வழக்கமாக வீட்டில்தான் பொங்கல் கொண்டாடுவேன். தற்போது இப்பகுதியில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள தாய்கள் என்னை செயற்கைத்தனம் இல்லாமல் மனதார வாழ்த்தினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த இடத்தை அரசியலுக்காக நான் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும், இப்பகுதி மக்கள் ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை எனக் கூறுகின்றனர். அதனால் என்னால் முடிந்த அளவிற்கு தற்போது ஒரு மணி நேரத்தில் தண்ணீர் அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அது எனது கடமையாக நினைக்கிறேன்.
கோயிலுக்கு வந்தேன், சென்றேன் என இருக்க கூடாது. இப்பகுதியில் உள்ள 100 வருட கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையும் செய்ய வேண்டும். அனைவரும் முடிந்த அளவிற்கு சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இங்கு ஒருவர் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாடு சார்பாக 100 பேராவது ஒலிம்பிக் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல எங்களின் விருப்பம்.