சென்னை:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சுமார் 90 இடங்களில் நடைபெற்று வந்த இந்த சோதனை சில இடங்களில் முடிவடைந்துள்ள நிலையில், முக்கிய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்று (அக்.9) வருமானவரித்துறை சோதனை நீடித்து வருகிறது.
இந்த சோதனையில் ஏற்கனவே, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சுமார் 4 கோடி ரூபாயும், சவிதா மருத்துவ கல்வி குழுமம் தொடர்புடைய இடத்தில் இருந்து 12 கோடி ரூபாயும் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகனின் மகளுக்கு சொந்தமான ஈக்காட்டுத்தாங்கல் கெஸ்ட் ஹவுஸில் இருந்து வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 7 வெளிநாட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த 7 கைக்கடிகாரங்களின் விலை சுமார் ரூ.2.45 கோடி எனவும் கூறப்படுகிறது.