சென்னை: சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியின் சலவை அறை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினரான தாம்பரம் துணை மேயர் காமராஜ் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், சொந்தமான நட்சத்திர விடுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் தொடர்பான அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், சென்னை தியாகராய நகர் பகுதியில் இயங்கி வரும் அக்கார்டு மெட்ரோ பாலிட்டன் என்கிற நட்சத்திர விடுதியில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் துணிகளைச் சலவை செய்யும் அறையில் பணம் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சலவை அறையிலும் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க:சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஐ விசாரணை!
அந்த நட்சத்திர விடுதியிலுள்ள சலவை அறையிலுள்ள துணி மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தும் மற்றும் துணிகளை வைத்திருக்கும் அறைகளிலும் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மாமல்லபுரம் பகுதியில் இயங்கி வரும் நட்சத்திர விடுதியிலும், இதே போன்ற சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், அடையார் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் பாரத் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அவர் நடத்தி வரும் பள்ளியின் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவரது அடையாறு இல்லத்தில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளதாகவும், அது குறித்து அவரிடம் விசாரணையை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சோதனையானது, மேலும் பல இடங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன தாம்பரம் துணை மேயர் காமராஜ் என்பவர் இல்லத்திலும், இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காமராஜ், ஜெகத்ரட்சகன் உறவினர் என்பதால் அவரது இல்லத்திலும் இந்த சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"2024 தேர்தல் திமுக vs பாஜக தான்" - அண்ணாமலை அதிரடி