தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் முறைகேடா? - சென்னையில் டீலருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு! - Avon Cycles

தமிழ்நாடு இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலவச சைக்கிள் டீலருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு
இலவச சைக்கிள் டீலருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு

By

Published : May 30, 2023, 1:47 PM IST

தமிழ்நாடு இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: தனியார் மெட்டல் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீடு என சென்னையின் இரு வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 30) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சைக்கிள்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்ததாரர் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மிதிவண்டிகள் விநியோகம் செய்வதற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மிதிவண்டிகள், குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஏவான் என்ற மிதிவண்டி நிறுவனத்தின் தமிழ்நாடு டீலராக சுந்தர பரிபூரணம் இருந்து வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான மிதிவண்டிகள் விற்பனை டெண்டர் எடுத்துள்ளார். இந்த நிலையில், ஒரு மிதிவண்டிக்கு உற்பத்தி செய்து விற்கப்படும் விலையை விட பல ஆயிரம் ரூபாய் மதிப்பு அதிகம் காட்டி, தமிழ்நாடு அரசுக்கு விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இதே போன்று இலவச மிதிவண்டி திட்டத்தைப் பின்பற்றி வரும் மற்ற மாநிலங்கள், பஞ்சாப்பில் உள்ள ஏவான் சைக்கிள் நிறுவனத்தின் நேரடி உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து சைக்கிள்களை வாங்கும்போது குறைந்த விலைக்கு வாங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சுந்தர பரிபூரணம் போன்ற டீலர் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் சைக்கிளை வாங்குவதால் அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மேலும், டீலரான சுந்தர பரிபூரணம் கடந்த ஆட்சி காலத்திலும் இதே போன்று சைக்கிள் டெண்டர் எடுத்து அதிக விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு சைக்கிள் டீலராக உள்ள சுந்தர பரிபூரணத்தின் மீது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நேற்று (மே 29) சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தச் சென்றனர்.

தொடர்ந்து, இன்று காலையும் ஆய்வு செய்ய சென்றுள்ளனர். மேலும், அதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் பைக்ராப்ட் சாலையில் உள்ள தனியார் கெமிக்கல் மற்றும் மெட்டல் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Karur IT Raid: கரூரில் 4வது நாளாக ஐடி ரெய்டு; அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இதுவரை 15 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details