சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சரான காமராஜ், அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,44,38,252 சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ், அவரது மகன் இனியன் மற்றும் இன்பன், நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அடிப்படையாக வைத்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 41.5 லட்சம் ரூபாய் பணம், 963 சவரன் தங்க நகைகள், 23,960 கிராம் வெள்ளி, ஐபோன், கணினி, ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.