தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு! - சென்னை மாவட்ட செய்தி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 26, 2023, 2:56 PM IST

Updated : May 26, 2023, 3:52 PM IST

அரசியல் கட்சி புகார்களின் எதிரொலி… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடக்கும் ஐடி ரெய்டு!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் 40க்கும் மேற்பட்ட இடத்தில் வருமான வரி சோதனை இன்று காலை முதல் அதிரடியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப்கார்டன் அவென்யூவில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் கரூரில் அவருக்கு சொந்தமான இடத்திலும், கோவையில் செந்தில் கார்த்திக் என்ற ஒப்பந்ததாரர் வீடுகளிலும் என செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில், திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சொத்துப் பட்டியல் குறித்து வெளியிட்ட விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மது ஆலைகள் மூலமாக ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து ஊழல் செய்ததாகவும் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும் அறப்போர் இயக்கம் சார்பில் டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வதற்கான டெண்டரில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

இவ்வாறாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. குறிப்பாக விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக்கில் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் கேட்பதாக கூறி எழுப்பப்பட்ட குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு டாஸ்மாக் கடைகளில் இருந்து விற்பனையாளர்கள் பேசும் வீடியோக்களும் வெளியாகின.

இது தொடர்பான புகார்கள் ஆளுநரிடமும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டு பரிவர்த்தனை நடந்திருக்கிறதா எனவும், குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமாக பணத்தை வசூல் செய்து கணக்கில் காட்டாமல் இருந்துள்ளனரா என்ற அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக வருமான வரி சோதனை நடத்தவில்லை என கூறப்பட்டாலும், அவரது சகோதரர் அசோக் மற்றும் நண்பர்கள் தொடர்பான வருமான வரி சோதனை அரசியல் ரீதியாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக நடத்தப்படும் வருமான வரி சோதனையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெறும் எனவும் சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகள், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வருமானவரித்துறை வெளியிடும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனையும் விசாரணையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு படுத்தி நடத்தப்பட்டு வருவதால், அடுத்த கட்டமாக வருமான வரி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்படலாம் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:MK Stalin: ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. ஒப்பந்தம், அழைப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Last Updated : May 26, 2023, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details