சென்னை:தமிழகத்தில்அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சென்னையில் மட்டும் அண்ணா நகர், அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிஎம்கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் செயல்பட்டு வரும் சிஎம்கே ப்ராஜெக்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த நிறுவனம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இடம், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள், கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில்வே மற்றும் மெட்ரோ பணிகளையும் இந்த நிறுவனம் கையாண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்நிறுவனம் அரசு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு, முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.