சென்னை:தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தற்போது வடபழனியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று (செப்.13) காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும், அவருக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள 16 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது 16 இடங்கள் சென்னையிலும், கோவையில் ஒரு இடமும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அதற்கான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது திடீர் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சத்யா தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிமுக முக்கிய பிரமுகர் வீடுகளிலும் இந்த சோதனையை நடந்து வருகிறது. தற்போது தி.நகர் சத்யாவின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு சொத்து குவித்துள்ளார் என்கிற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த சோதனையில் அடிப்படையில் தி நகர் சத்யா வருமானத்திற்கு அதிகமாக 16.33 விழுக்காடு சொத்துக்கள் குவித்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது, சத்யாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 21 லட்ச ரூபாயு மதிப்பிலான 21 சொத்துக்கள் இருந்ததாகவும், பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது 16 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்புடைய 38 சொத்துக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவு செய்து உள்ளனர்.
மேலும் இவர் 2 கோடி 64 லட்ச ரூபாய் மதிப்புடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளத். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், இந்த அனைத்து சொத்துக்களும் குவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, இவரது மகன் மற்றும் மனைவியின் மீதும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என வாங்கி வைத்து உள்ளதார் என்ற தகவலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தப்படும் இந்த தொடர் சோதனையில், மேலும் பல விவரங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ED Raid : 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு! நடப்பது என்ன?