சென்னை:சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (நவ.16) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சி மற்றும் பெங்களூரில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, சென்னையில் தற்போது சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, ரியல் எஸ்டேட் அதிபர்கள், குத்தகைதாரர்கள், அமைச்சர்கள், சில முக்கிய புள்ளிகள் என வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை அதிரடியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கேகே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நீலகண்டன் வீடு உள்ளது. இங்கு இன்று (நவ.16) காலை முதல் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் ரத்தினம் தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வினோத்குமார் என்பவர் வீட்டிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.