சென்னை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தினரின் மதமாற்ற முயற்சிதான் காரணம் என்ற மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விசாரிக்க அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
குழு உறுப்பினர்களான விஜய சாந்தி, சித்ரா ராய் வாகு, சந்தியா ராய், கீதா விவேகானந்தா ஆகிய நால்வரும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) மாணவியின் குடும்பத்தார் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து வானதி சீனிவாசன் நேற்று (பிப்ரவரி 2) செய்தியாளரைச் சந்தித்து கூறுகையில், "மாணவி தற்கொலை தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடிவருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை ஜெ.பி. நட்டாவிடம் வழங்கும்.
மாநில அரசுக்கு அவப்பெயர்
மாணவியின் அருகில் உள்ள வீட்டார், உறவினர்களிடம் கேட்டறியப்பட்டது. அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாணவி மரணம் தொடர்பாக காவல் துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு சென்றுள்ள நிலையில், மாநில அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. அதிமுக உள்பட பிற கட்சிகள் இந்த விவகாரம் குறித்து பேசாதது எங்களுக்கு வருத்தம் தருகிறது. சட்டப்பேரவையில் பேச எனக்கு முறையாக நேரம் தரப்படுவதில்லை, நேரம் கொடுத்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து பேரவையில் பேசுவேன்" எனத் தெரிவித்தார்.