சென்னை:குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கப்படுவதை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிதாக 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளிட்ட 150 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் நாளை மறுநாள் முதல் செயல்படவுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக தொற்று குறையும். தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் படுக்கைகள் போதிய அளவு உள்ளன.
அதுபோல் கறுப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதலுக்கு கரோனாதான் காரணமா அல்லது வேறு காரணமா என மருத்துவ நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 458 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 244 பேர் சக்கரை நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள்.