சென்னை: தமிழகத்தின் அடுத்த டிஜிபியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (ஜூன் 22) யூபிஎஸ்சி ஆலோசனைக் கூட்டத்தில் 3 மூத்த அதிகாரிகள் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக, நாளை டெல்லியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக கேடரில் டிஜிபிக்களாக உள்ள மூத்த அதிகாரிகள், துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகாமல் இருக்கும் மூன்று அதிகாரிகளை தமிழக அரசு தரப்பில் பரிந்துரைத்து, தொடர்ந்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு விதிகளின் படி அவர்களில் ஒருவரை தமிழக அரசு டிஜிபியாக தேர்ந்தெடுப்பர்.
தமிழக காவல் துறையில் தற்போது 10 டிஜிபிக்கள் உள்ளனர். தமிழக கேடர் அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது அயல்பணியில் டெல்லி காவல் ஆணையராக உள்ளார். அதற்கடுத்து சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, ஆபாஷ் குமார் ஆகியோர் மூத்த அதிகாரிகளாக உள்ளனர்.
அதேபோல் கடந்த மாதம் பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை பயிற்சி அகாடமி இயக்குநராக உள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், மத்திய அயல்பணியில் உள்ள ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங், டிஜிபி வன்னி பெருமாள் ஆகியோரும் டிஜிபி பட்டியலில் உள்ளனர். இவர்களில் மூன்று மூத்த ஐபிஎஸ்களை பட்டியலிட்டு நாளை நடைபெறும் ஆலோசனைக்குப் பின்னர் ஒருவரை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உள்துறை செயலாளர் அமுதா முன்கூட்டியே இன்று டெல்லி செல்ல இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தற்போதையே டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் டெல்லி செல்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:திருச்சியில் விமான நிலையத்தில் கைப்பையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம்!