சென்னை:கணக்குப் பாடத்தில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளதால், பொறியியல் படிப்பிற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் குறையும் எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேதியியல், தாவரவியல் பாடங்களில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், இயற்பியல் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலிலும் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. 100க்கு 100 மதிப்பெண்களை முக்கியப் பாடங்களான இயற்பியலில் 2022ஆம் ஆண்டு 634 பேரும், 2023ஆம் ஆண்டில் 812 பேரும் எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1500 பேரும், 2023ஆம் ஆண்டில் 3909 பேரும் எடுத்துள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 47 பேரும், 2023ஆம் ஆண்டில் 340 பேரும், விலங்கியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 22 பேரும், 2023ஆம் ஆண்டில் 154 பேரும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் கடந்தாண்டு 3ஆயிரத்து 827 பேரும், 2023ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 618 பேரும் பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1858 பேரும், 2023ஆம் ஆண்டில் 690 பேரும் பெற்று 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த நிலையில் கல்வி ஆலோகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். ஆனாலும், மாணவர்கள் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு எழுத வராத மாணவர்களை மீண்டும் எழுதுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
12ஆம் வகுப்பிற்கான கணக்குப் பாடத்திற்கான தேர்வு கடினமாக இருந்தது. அதனால் தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது. கணக்குப் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1858 பேரும், 2023ஆம் ஆண்டில் 690 பேரும் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 3909 பேரும், இயற்பியல் பாடத்தில் 812 பேரும் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணக்கு பாடப்பிரிவில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல் தான் தெரிகிறது.