சென்னை: தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமை ஆகியவை அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (செப் 26) தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வருவாயை மறைத்து சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழக அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
வருமான வரித்துறை: தூத்துக்குடி அனல் மின் நிலையம், தமிழக மின்சார வாரியத்திற்கு பொருள்களை சப்ளை செய்யக் கூடிய முக்கிய நிறுவனங்கள், மேட்டூர் அனல் மின் நிலையங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைக்கப் பெற்ற முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.