சென்னை:கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் எம்ஜிஎம் குழுமத்திற்குச் சொந்தமான 45 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர் புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
குறிப்பாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்கா, எம்ஜிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் நேசமணி மாறன் முத்து மற்றும் அவரது மகன்களின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நான்கு நாள்களாக இந்த வருமான வரி சோதனையானது நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் மூலம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முறைகேடாக பல்வேறு விற்பனை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழுமத்திற்கு வணிகத்தொடர்பு இருக்கும் நிறுவனத்திலிருந்து போலி ஆவணம் பெறப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வணிகத் தொடர்புடைய நிறுவனங்களிடம் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகளை கணக்கில் காட்டாமல் ரொக்கமாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் பெறப்பட்ட பணத்தை முறைகேடாக முதலீடு செய்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு ஹோட்டல்களின் செயல்பாடுகளை, இந்தியாவில் இருந்துகொண்டு சட்டவிரோதமாக செயல்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையில் 3 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கப் பணமும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவராக இருந்தபோது எம்ஜிஎம் குழுமத்தின் நிர்வாகி நேசமணி மாறன் முத்து, சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஒதுக்கியது மற்றும் பல நிறுவனங்களின் முதலீடுகள் மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்தியாவில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எம்.ஜி.எம் குழுமம் மீது அந்நிய செலாவணி மோசடி புகார்!