சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் குடிநீர் கிராமங்களுக்கு கிடைக்கவில்லை என்ற தகவலின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கரோனா பேரிடர் காலத்தில் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல். குடிநீர் வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குடிநீர் கிடைக்காவிட்டால் அதை கிடைக்கச் செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.