சென்னை:மிக்ஜாம் (Michaung) புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், பிற பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே, மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து வட்டங்கள்:சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ளவர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களுக்கு முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் உள்ளவர்களுக்கு வழங்கலாம்.
ரொக்கமாக நிவாரணம்:இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிவாரணம் யாருக்கு வழங்கலாம்:மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இழந்த குடும்பங்களுக்கு (மேலே குறிப்பிட்டுள்ள வட்டங்கள், வருவாய் கிராமங்கள்) நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி, ரூ.6 ஆயிரம்(ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம்:இந்த மழை வெள்ளத்தால் மத்திய மற்றும் மாநில அரசு, மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்வாதாரம், துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் இழப்பு அடைந்திருந்தால், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் கூறி விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம், அவரவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது.
நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குதல், டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணி ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிப்பதுடன், தேவையான எண்ணிக்கையில் விண்ணப்பப் படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
டோக்கன் (Token) வழங்கும் முறை:நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் விநியோகிப்பதற்காக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்குமேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழக்கப்படும்.
கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காவல்துறையுடன் இணைந்து, தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நிவாரண உதவி வழங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பாசி பிடித்த கேனில் இருந்த பானி பூரி ரசம்..! ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை!