அமைச்சர் காந்தி நிவாரணமாக வழங்கிய அரிசி காலாவதி திருவள்ளூர்:திருமழிசை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய அரிசி காலாவதியானதாக இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள், நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, தண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 333 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; வாகன ஓட்டிகள் மீதான 6,670 வழக்குகள் ரத்து - போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!
இதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, எம்.பி ஜெய்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமழிசை பகுதியில் வழங்கப்பட்ட அரிசி காலாவதியானது என புகார் எழுந்துள்ளது. அதிலும், அமைச்சர் காந்தி வழங்கிய அரிசியில் பேக்கிங் தேதி 05/22 என்றும், காலாவதி தேதி 04/23 என்றும் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு சிலர் இதனை அதிகாரிகளிடம் கேட்டுச் சென்றுள்ளனர். மற்றவர்கள் அது பற்றி தெரியாமல் வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நிவாரணமாக வழங்கப்பட்ட உணவுப் பொருள் காலாவதியானதாக இருந்த சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த காலாவதியான அரிசி வழங்கப்பட்டது பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, திருமழிசை பகுதியில் வழங்கப்பட்ட அரிசி ராணிப்பேடையில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டதில்லை என்றும், அவை அமைச்சர் தரப்பில் வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிவாரணப் பொருட்களை வழங்க 4.30 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து, சுமார் 3 மணி நேரம் காக்க வைத்த பின் அமைச்சர் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மழை வெள்ளம் பாதித்த அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!