சென்னை:இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத குழுவிற்கும் இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறித்தில், “அயலகத் தமிழர் நலத்துறையால் உடனடியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசை உதவி எண்கள் 8760248625, 9940256444, 9600023645 மூலமாகவும், மின்னஞ்சல் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் அங்குள்ள தமிழர்களிடம் தற்போது தொடர்பு கொண்டு, அங்கு மேற்படிப்பிற்காகவும், பணி நிமித்தமாகவும் சென்றுள்ள சுமார் எண்பத்து நான்கு (84) நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் சில சுற்றுலா பயணிகளும் அடங்குவர். இவர்கள் பெர்சிபா (Beersheba), எருகாம் (Yeruham), பென் குரியான் (Ben Gurion), கிழக்கு ஜெருசேலம் (East Jerusalem), ஜெருசேலம் பல்கலைக்கழகம் (University of Jerusalem) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம் (Tel Aviv University) போன்ற இடங்களில் தங்கி உள்ளனர்.