இஸ்ரேலில் இருந்து 23 தமிழர்கள் பத்திரமாக மீட்பு சென்னை: இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன ஹமாஸ் ஆயுதப்படையினர் இம்மாதம் (அக்.) 7ஆம் தேதி அன்று, ராக்கெட்கெள் மூலம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் இரு பகுதிகளுக்குமிடையே போர் சூழல் நிலவி வருகிறது. இரு பகுதிகளுக்குமான தாக்குதல், பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து இஸ்ரேல் பகுதிகளில் சிக்கி தவித்துவரும் இந்தியர்களை, மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் கீழ் தனி சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.
அந்தவகையில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று (அக்.18) காலை 17 பேர் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்தவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில், மத்திய அரசு 5 நாட்களாக அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருகிறார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் மத்திய அரசிடமும் நம்முடைய முதலமைச்சர் வலியுறுத்தி, அவர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்கும், மேலும் அவர்கள் பத்திரமாக விமான நிலையத்திலிருந்து இல்லம் திரும்புவதற்கும் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால் அங்குள்ள 158 தமிழர்களில் இதுவரையில் 121பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். 26பேர் தாமாக திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.18) 23 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்புகிறார்கள். அவர்களில் 17 பேர் சென்னைக்கும் 4 பேர் கோவைக்கும் 2 பேர் மதுரைக்கும் வருகிறார்கள். இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து கோவைக்குத் திரும்பும் 4 பேரை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்று இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறார். மீதம் 11பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்போது அவர்கள் அங்கேயே இருப்பதாக அவர்களுடனான வாட்ஸ் அப்பில் தொடர்பில் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியுள்ள, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரமேஷ் குமார் கூறுகையில், "கடந்த ஒரு வாரகாலமாக தமிழ்நாடு அரசு எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அங்குள்ள நிலை குறித்தும் எங்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்கள். அங்கு எல்லையில் தான் தற்போது பிரச்சனை உள்ளது. அங்கு ஏவுகணை தாக்குதல்கள் உள்ளதால் பயம் நிறைந்த சூழல் உள்ளது. அதனால் தாயகம் திரும்பியுள்ளோம். இதற்கு உதவிய தமிழ்நாடு அரசிற்கு நன்றி" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய மற்றொரு இஸ்ரேல் வாழ் இந்தியர், "அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் நாங்கள் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் உதவியால் தமிழகம் திரும்பி உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசிற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இஸ்ரேலில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கோவை வருகை - இதுவரை 132 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்!