கடந்த மார்ச் 25ஆம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தியதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மே 3ஆம் வரை எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.
இதனிடையே நகர்ப்புறங்களில் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருந்ததாலும், மூன்றாம் கட்டப் பரவலைத் தடுக்கும் நோக்கிலும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகரத்தையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
வட மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள கரோனா, ஆரஞ்சு மண்டலத்தில் (orange zone) இருக்கும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த இரு வாரங்களாக புதிதாக தொற்று ஏதும் ஏற்படாமல் இருப்பதால், பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் அவை கரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு முடிய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் முதல்கட்டமாக சில ஆலைகளை இயஙக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமான பராமரிப்புப் பணிகள், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரப் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதலமைச்சர் தலைமையில் காணொலிக் காட்சி மூலம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் அனைத்து மாவட்டங்களும் படிப்படியாக பச்சை மண்டலமாக மாறுவதற்கு, மக்கள் அனைவரும் சமுக விலகலைக் கடைப்பிடிப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை கரோனா தொற்று பாதிக்காத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை இயக்க, முதலமைச்சர் அந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மே 3ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் புலப்படுகிறது. ஆயினும், நாளை நடைபெறவிருக்கின்ற மருத்துவ நிபுணர்கள் உடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் பின்பு மே 3ஆம் தேதிக்குப் பிறகு பச்சை மண்டல மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட வழிமுறைகளில் தளர்வை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.