சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழா, ஜூலை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இணை வேந்தரான என்னிடம், எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை.
அதேநேரம், உயர் கல்வித்துறை செயலாளரிடமும் ஆலோசனை நடத்துவதில்லை. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது?
ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநராக இல்லாமல், பாஜகவிற்கு பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் உள்ளார். இவ்வாறு பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்.