சென்னை ராயப்பேட்டை தனியார் மண்டபத்தில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவியை வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை உறுப்பினர்களில் நலிவடைந்த 314 தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுகவினருக்கு வசூல் செய்து தான் பழக்கமே தவிர நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது கிடையாது. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட 310 பேரில் 136 பேர் பெண்கள். வைத்திலிங்கத்தை பொறுத்தவரை என்னையும், எடப்பாடி பழனிசாமியினையும், காமராஜையும் வசைபாடுவதே வழக்கம்.
வைத்திலிங்கம் திமுகவின் பி-டீம் (B Team) ஆக மாறி செயல்பட்டு வருகிறார். வைத்திலிங்கம் போன்ற ஆட்கள் இருந்ததால் தான் எங்களுக்கு தோல்வியே. தஞ்சாவூரில் மூப்பனாருக்கு பிறகு 2ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வைத்திலிங்கத்திற்குத் தான் உள்ளது. ஆட்சியில் இருந்து சம்பாதித்து விட்டு இன்று திமுகவிற்கு விலை போய், கட்சி குறித்து விமர்சனம் செய்வதை எந்த தொண்டனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வைத்திலிங்கம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அனைவரும் பொய்க்கால் குதிரைகள். இவர்கள் அனைவரும் ஸ்டாலினை வைத்து இன்று பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.