சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்-துணை ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று கழகத்தினர் அனைவரும், 'என் இல்லம் அம்மாவின் இல்லம்' என்று உளமார நினைத்துக்கொண்டு மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றி அதிமுகவை காப்பதாக உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக எனும் இயக்கத்திற்கும் அதனை காவல் தெய்வமாக காத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும்; இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் மட்டும்தான் நம் விசுவாசம் சொந்தமுடையது” என்று கூறியுள்ளனர்.
அவர்களது அறிக்கையின் மூலம், அதிமுகவானது திராவிட சித்தாந்தத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறது என்பது தெரிகிறது என சிலர் கூறுகின்றனர். மேலும், ஊரடங்கு அவசர காலகட்டத்தில் வீட்டில் விளக்குகளை அணைத்து தீபத்தால் ஒளியேற்றி கரோனாவுக்கு எதிராக ஒன்றுகூடும்படி பிரதமர் கூறியதற்கு ஒத்தது இந்த இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக பாஜகவின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது என்று பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கும் வேளையில் தற்போது இந்த அறிக்கையின் மூலமும், ‘போலச்செய்தல்’ மூலமும் அதனை அதிமுக உறுதிப்படுத்திவிட்டதோ என்ற முணுமுணுப்பும் கட்சிக்குள் கேட்கிறது.
திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சியின் கொள்கை என்பது சற்று குழப்பமானதாகவே இருந்து வந்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு, மதமாற்ற தடைச் சட்டம் என அதன் வரலாறு நெடுகிலும் சில காவி கறைகள் படிந்திருந்தாலும் தமிழ்நாடு சூழலுக்கேற்ற திட்டங்களையும் எம்ஜிஆர் நிறைவேற்றினார்.