தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஊரகப் பணிகளுக்கு முறையான நிதிப் பகிர்வினை அளிக்கப்படாமல் இருக்கிறது.
குறிப்பாகப் பெண் தலைவர்களுக்கு எதிராக சாதிய ஒடுக்குமுறைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிவருகிறது. பெண்களுக்கு 50 விழுக்காடு இட உரிமை வழங்கப்பட்டுவிட்டாலும் உள்ளாட்சிப் பொறுப்புகளில் பெண்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கான சூழலும்; அதற்கான ஆதரவு கட்டமைப்பும் உருவாக்கப்படாமல் இருந்துவருகிறது.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு சந்தித்து வரும் நிலையில், மாநில அரசு கூறிவருவதுபோல் தமிழ்நாடு உண்மையிலேயே வெற்றிநடை போடுகிறதா என்று பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் சமூக ஆர்வலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது, "டாஸ்மாக் மதுக் கடைகளை செயல்பட அனுமதிக்கும் அல்லது மறுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அரசுகளுக்கு வழங்க வகை செய்யும் தனிச்சட்டம் அல்லது உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் கிராம சபையின் அனுமதி பெறுவதும் நகர்ப்புறப் பகுதிகளில் முறையே ஏரியா சபா மற்றும் வார்டு கமிட்டிகளின் அனுமதி பெறுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி என தனித்தனியான துறைகளும் இயக்குநரகங்களும் அமைக்கப்பட வேண்டும். மேலும், இவை அனைத்தும் உள் சுயாட்சி அரசாங்கம் என்ற அமைச்சகத்தின் கீழ் இயங்க வேண்டும்.
கிராம ஊராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது. அதன் மதிப்பூதியத்தை உயர்த்திட வேண்டும்" என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில், தன்னாட்சி, வாய்ஸ் ஆப் பீப்பிள், அறப்போர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.