சென்னை:கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனமும் ஒரு கிருமி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த கருத்துக்கு பாஜக மற்றும் சங் பரிவார அமைப்பு என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பர்மஹன்ஸ் ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், “திமுக சார்பாக சனாதன தர்மத்தை அழிப்போம் என நீங்கள் தேர்தல் அறிக்கை விடுங்கள், பாஜக சார்பாக சனாதனத்தை வளர்ப்போம் என தேர்தல் அறிக்கை நாங்கள் அளிக்கிறோம். அப்போது பார்க்கலாமா யாருக்கு ஓட்டுகள் விழுகிறது” என சாவல் விடுவது போன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சனாதன தர்ம விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட கருத்து என்னவென்று தெரியாமலேயே பிரதமர் மோடி பதில் கருத்து வெளியிட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.