சென்னை:தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று(மார்ச்.24) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிதி பயன்பாடு குறித்து துறை சாராத தணிக்கையாளர்களை கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார். மேலும், கோவில் நிதி, துறை சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும், கோவில் நிதி நீதிமன்ற வழக்கு செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது எனவும், இது அறநிலையத்துறை சட்டப்படி தவறானது எனவும் தெரிவித்தார்.
கோவிலின் பொது நிதியில் இருந்து செய்த செலவுகள் குறித்த விவரங்களைக்கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், பொது நிதியில் மேற்கொண்ட செலவு விவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்றும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.
அதேபோல திருவானைக்காவல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் நிலங்களில் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எந்த வாடகையும் வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார். கோவில் நிலங்களை அறநிலையத்துறையே ஆக்கிரமித்துள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையே அலுவலக பயன்பாட்டுக்காக ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் பல கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குகளும் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் நிலத்தையும் வருவாயையும் அறநிலையத்துறை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சில கோவில்களில் பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் தனியாருக்கு குத்தகை விடுவதாகவும், அந்த வருவாயையும் கோவிலுக்கு தராமல் அவர்களே பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில், பயன்படுத்த முடியாத, ஆக்கிரமித்து பயன்பாட்டில் உள்ள இடங்களை, பொது நோக்கத்திற்காக விற்கலாம் அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ விடலாம் என அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால் கோவில் நிர்வாகங்களுக்கு வருவாய் கிடைக்கும் என்றும், அது வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அறநிலையத்துறை தெரிவித்தது. ஆனால், இதுபோன்ற குத்தகை வருவாய் சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு சென்று சேர்வதில்லை என்று மனுதாரரைப் போலவே பலரும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா ஈஸ்வரி? ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை - புது ரூட்டில் திரும்பும் வழக்கு!