சென்னை:சென்னை ஆழ்வார் திருநகரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி பள்ளி வேன் மோதியதில், 2ஆம் வகுப்பு மாணவன் தீக்சித் உயிரிழந்தான். சென்னையில் சிறுவன் தீக்சித்தின் உடலைப் புதைப்பதற்கு ஒரு கத்தோலிக்க சபை மறுத்துள்ளது. இது தொடர்பாக சிறுவனின் தாய் கதறியழுதபடி புகார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதைப்பதற்கு இடம் கொடுப்பதில் என்ன சிக்கல்? எனத் தேடியதன் விளைவு தான் இந்த செய்திக்கட்டுரை.
சிறுவன் தீக்சித்தின் பெற்றோர் அந்த குறிப்பிட்ட சபையை சார்ந்தவர்கள் இல்லை என்றும்; அவர்கள் பங்கு வரியை செலுத்தவில்லை எனவும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. எனினும் இறுதியில் அந்த குறிப்பிட்ட தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இறந்த உடலை புதைக்க அனுமதித்தனர். இதேபோல கரோனா பெருந்தொற்று காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நகரப் பகுதிகளிலும் நடந்துள்ளன.
கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக தகனம் செய்வதற்கான தடை இருந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்தவ விரோதமாக கருதப்பட்டது. இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கல்ல. மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான கல்லறைகளில் குறிப்பாக பெரும் நகரங்களில் இடப்பற்றாக்குறை பெரும் சிக்கலாக உருவாகி உள்ளது. இதற்கு மாற்று வழியான தகனம் செய்வது பிரபலமாகவில்லை.
இது குறித்து தமிழ் மையத்தின் நிறுவனர் ஜெகத் கஸ்பார், கூறுகையில், "பெரும் நகரங்களில் திருச்சபைக்குச் சொந்தமான இடங்களில் பிரேதங்களைப் புதைப்பதற்கு ஒரு சில விதிகள் உண்டு. இறந்தவர்கள் அந்தந்த கத்தோலிக்க பங்கு எல்லைக்குள் உள்ளவர்களாகவும், அதன் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும். எனினும் மரித்தவர்கள் மற்ற சபைகளை (சி.எஸ்.ஐ, பெந்தக்கோஸ்து) சார்ந்தவர்களாயின், தவிர்க்க முடியாத காரணத்தால் உடல் அடக்கம் செய்ய கத்தோலிக்க திருச்சபை அதற்கு இடம் கொடுக்கலாம்", எனக் கூறினார். உடல் தகனத்தைப் பொறுத்தவரை, இறந்தவர்களின் உறவினர்கள் முடிவெடுக்கலாம். மேலும் தகனம் செய்வது குற்றமல்ல எனவும் தெரிவித்தார்.
தகனத்தை ஏற்பதில் தயக்கம்:கத்தோலிக்க திருச்சபை சட்டத்தின்படி, இறந்த உடல்களை மூன்று முறையில் அடக்கம் செய்யலாம். முதலாவதாக, கல்லறைத் தோட்டம்: இந்த முறையை பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். இரண்டாவதாக, பெட்டக கல்லறை: இந்த முறையை கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்துவது இல்லை என்றாலும், பெரும்பாலான கத்தோலிக்க அருட்பணியாளர்கள் இந்த நடைமுறையில் அடக்கம் செய்யப்படுகின்றனர். மூன்றாவதாக தகனம்: உடல்களை எரியூட்டும் இந்த முறையை திருச்சபை சட்டம் அனுமதித்தாலும், மக்கள் இதனை பின்பற்றுவதில்லை என்று கூறலாம்.
மனிதாபிமான அடிப்படையில் இடம் தந்திருக்கலாம்:மேலும், "ரோமானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் கிறிஸ்தவம் பிறந்தது. ரோமானியர்கள் உயிர்த்தெழுதல் அல்லது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாததால் இறந்தவர்களைத் தகனம் செய்தனர். ஆனால், தற்போது ஒவ்வொரு ஊரிலும் மக்களே சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். உதாரணமாக, வேறு சபைகளில் உள்ளவர்களை கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த கல்லறைகளில் புதைக்கக் கூடாது," என்ற ஜெகத் கஸ்பார், சென்னையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, மனிதாபிமான அடிப்படையில் இறந்த சிறுவனுக்கு முதலிலேயே கல்லறையில் இடம் கொடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் கத்தோலிக்க தேவாலயத்தின் அருட்திரு.மைக்கேல், நம்மிடம் கூறுகையில், "ஆபிரஹாம் வழிமரபில் தோன்றிய மூன்று முக்கிய மதங்களான யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை அடக்கம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் தகனம் செய்வதற்கான தடை குறித்து தெளிவாக கூறுகின்றன. தகனம் செய்யப்பட்ட ஒருவர் ஒருபோதும் விண்ணுலகம் செல்லமாட்டார் என பொருள் அல்ல. பூகம்பங்கள், சுனாமிகள், வெள்ளம் அல்லது தொற்றுநோய்கள் போன்ற பேரழிவுகளுக்குப் பிறகு தகனத்தை திருச்சபை ஒருபோதும் எதிர்க்கவில்லை," எனக் கூறினார்.