சென்னை:சென்னையில் கோடைகால வெயிலின் தாக்கம் மற்றும் மெட்ரோ நீர் விநியோகத்தை தொடர்ந்து ஏரிகளில் நீரின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் மூன்று மாதங்களில் ஏரிகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உணர்ந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் ஆந்திர அரசை நாடி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து கடந்த மே 8 ஆம் தேதி முதல் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது கிருஷ்ணா நீரானது வினாடிக்கு 520 கன அடி பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் மற்ற மெட்ரோ எரிகளான- செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீரின் மொத்த கொள்ளளவு 7,785 மில்லியன் கியூபிக் அடியாக (7.8 டி.எம்.சி) அடியாக உள்ளது. எனினும் அடுத்த வடகிழக்கு பருவமழை (நவம்பர்) தொடங்கும் வரை இந்த நீர் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி நிபுணர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
"கடந்த மே 8 முதல் ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரை திறந்து விட்டுள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பை வைத்து வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னைவாசிகளுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்யலாம். அடுத்து வரும் மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க ஆந்திர அரசிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கிருஷ்ணா நீரை திறந்து விட கோரிக்கை வைத்தது", என செயற்பொறியாளர் ஒருவர் கூறினார்.
மேலும் வரும் செப்டம்பர் மாதம் வரை கிருஷ்ணா நீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு உறுதி அளித்தள்ளது. தற்போது வரை 1.8 டி.எம்.சி நீர் பூண்டி ஏரிக்கு கிடைத்துள்ளது. மேலும் 1.5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.