தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டர்லைட் ஆலை திறப்பில் இரட்டை வேடம் போடுகிறதா அதிமுக? - கரோனா இரண்டாம் அலை

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்ததாக அதிமுக அரசு கூறிவரும் நிலையில், தமழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்டெர்லைட்டில் உற்பத்திசெய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்ற கருத்தை முன்வைத்துள்ளார். எனவே, ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடமிடுவதுபோல தெரிவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Is AIADMK playing two roles in the opening of the Sterlite plant?
Is AIADMK playing two roles in the opening of the Sterlite plant?

By

Published : Apr 27, 2021, 5:59 PM IST

சென்னை:இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தனது தீவிரத்தைக் காட்டிவரும் சூழலில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் திணறிவருகின்றன.

இதனால் பலர் உயிரிழந்த நிலையில் இது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவருகிறது.

இந்தப் பாதிப்பு வரும் மே இரண்டாம் வாரத்தில் சுமார் 20 ஆயிரத்தை நெருங்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்குமான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் நிறுவனத்தைத் திறந்து மக்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்திசெய்யவும், பராமரிப்புப் பணி மேற்கொள்ளவும் அனுமதிக்குமாறு அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்செய்தது.

இந்த வழக்கின் விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற விரும்பவில்லை. இந்த ஆலையை திறக்க மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர் எனத் தமிழ்நாட்டில் நிலவும் சூழலை எடுத்தியம்பினார்.

இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆலையை தனியார் நிறுவனம் திறப்பதற்குப் பதிலாக தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாமே எனக் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. அதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தாக ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையைத் திறக்கலாம். அதற்கான மின்சாரத்தைத் தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும் என வலியுறுத்தின.

மேலும், ஆலையைத் தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டுமே திறக்க வேண்டும், அரசின் மேற்பார்வையில் குழு கண்காணிப்பில் இயக்க வேண்டும், வேறு பகுதிகளில் எந்தவித பராமரிப்புப் பணி மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளையும் கூறினர். தொடர்ந்து, தமிழ்நாட்டின் தேவைபோக மீதமிருக்கும் ஆக்சிஜன் மட்டுமே பிற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில், "ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதில் மருத்துவத் தேவைக்காக 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மருத்துவ சிகிச்சைக்கு 99.4% சுத்தமான ஆக்சிஜன் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆனால், ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 92-93 விழுக்காடுதான் ஏற்ற வகையில் இருக்கும். வாயு நிலையிலான ஆக்சிஜனை திரவ நிலைக்கு மாற்றும் தொழில்நுட்பம் ஸ்டெர்லைட்டில் இல்லை. அதை அமைக்கவே ஒன்பது மாதங்கள் ஆகும்" என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எப்படி அவசர அவசரமாக அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேள்வி தன்னெழுச்சியாக எழுந்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றி செல்வன், "அவசரகதியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என அறிவிப்பு உள்ளபோது ஸ்டெர்லைட்டுக்கு மறைமுகமாக உதவுவதுபோல் அரசின் அறிவிப்பு உள்ளது.

அந்தப் பகுதி மக்கள் ஆலையைத் திறக்க கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அரசின் முடிவு வருத்தமளிக்கிறது" என்றார்.

இது குறித்து பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி, "ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறிய கருத்து குறித்து அரசு பரிசீலிக்கும். அதே நேரத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ஆலையை முழுமையாக அரசு எடுத்து நடத்தும் அதிகாரம் இல்லை. எனவே, புதிய அரசு அமைந்த உடன் இது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், வல்லுநர்கள் உதவியுடன் மருத்துவத் தேவைகளுக்காக 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது சாத்தியம் என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க தமிழ்நாடு அரசின் பிரமாணப் பத்திரம் மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து விநியோகிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பினும், தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதப்படுகிறது. நிலைமையைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என ஆளும் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details