சென்னை: தமிழ்நாடு சிமென்ட்ஸ் (TANCEM) நிறுவனத்தின் மீதான செயலாக்கத் தணிக்கை அறிக்கை இன்று (ஏப்.21) சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், "2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021 மார்ச் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கி, ஜூலை மற்றும் டிசம்பர் 2021 கால இடைவெளியில் டான்செம்மின் அரியலூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை சார்பாக தணிக்கை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே, டான்செம் லாபம் ஈட்டியது. மீதமுள்ள ஆண்டுகளில் நஷ்டம் அடைந்தது.
நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வரும் சூழலிலும், நிதி மேலாண்மைக் குறைபாடுகளால், அதாவது, விரிவாக்க ஆலைக்கு நிதி பெறுவதில் கால தாமதம், முடங்கிய ஆலைக்காக மூலப் பொருட்களை இறக்குமதி செய்தல், உள்ளீட்டு வரி வரவை கோராதது போன்ற தேவையற்ற செலவுகள் மற்றும் தவிர்த்திருக்கக்கூடிய நஷ்டங்களை ஏற்படுத்தி கொண்டது.
அரசிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒன்பது சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் எட்டு சுரங்கங்களுக்கு டான்செம் சுற்றுச்சூழல் அனுமதியை பெறத் தவறியது. அனுமதியின்றி சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கற்களைப் பிரித்தெடுப்பதற்காக டான்செம் சுரங்கங்களை இயக்கியதன் விளைவாக, அது ரூ.119.61 கோடி அபராதம் மற்றும் ராயல்டி பொறுப்புகளை எதிர்கொண்டது.
டான்செம் ஆலைகளில் நிலக்கரி துகள்களின் தட்டுப்பாடு மற்றும் முறையற்ற பராமரிப்பு போன்ற கட்டுப்படுத்தக்கூடிய காரணிகளால் உற்பத்தியின் மூன்று நிலைகளிலும் (பதப்படுத்தப்பட்ட சுண்ணாம்புக்கல், கிளிங்கர் மற்றும் சிமெண்ட்) ஏற்பட்ட உற்பத்தி இழப்பு ரூ.3,446.13 கோடி. டான்செம் தரம் குறைந்த நிலக்கரியை வாங்கியதால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய கூடுதல் செலவீனம் ரூ.714.92 கோடி.
அரியலூரில் விரிவாக்க ஆலையை நிறுவுவதில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்ட தவிர்த்திருக்கக் கூடிய கால தாமதம் காரணமாக, டான்செம் நிறுவனத்திற்கு ரூ.3,229.14 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. அடிப்படை விலை தவறாக கணக்கிடப்பட்ட காரணத்தால் அரியலூரின் விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்த விலை ரூ.325.38 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.