சென்னை: அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கர்(49). இவர் நேற்றிரவு அயனாவரம் காவல் நிலையம் முன்பு கே.எச் சாலையில் காவலர்களுடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் ஐ.சி.எப்.பில் இருந்து கே.எச் சாலையை நோக்கி இரண்டு வாகனங்களில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வேகமாக வந்துள்ளனர்.
வாகனத் தணிக்கையில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் சங்கர் அவர்களை விசாரிப்பதற்காக வழிமறித்த போது, அவர்கள் கையில் வைத்திருந்த கவ்பார் இரும்பு ராடால் உதவி ஆய்வாளரை தலையில் தாக்கி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, அருகில் இருந்த காவலர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சங்கர் அயனாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பிச்சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
உதவி ஆய்வாளரை கவ்பார் இரும்பு ராடு மூலமாக தாக்கியவர்கள் கடையை உடைத்து கொள்ளையடிக்கும் நபர்களா அல்லது வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பித்து செல்கிறார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - தாக்குதலுக்குள்ளான JNU மாணவர் வேதனை!