சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரி, நங்கநல்லூர் மாநகராட்சி சுதந்திர பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை, அரசு தலைமை செயலாளர் இறையன்பு இன்று (செப்.12) பார்வையிட்டார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் முலம், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வமாக வந்துள்ளனர்.
ஆர்வத்தைப் பொறுத்து வாரந்தோறும் முகாம்
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதால் பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இன்று நடைபெறும் முகாம்களில் அதிக அளவு மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக வரும் பட்சத்தில், வாரம் ஒரு முறை பெரிய அளவிலான முகாம்கள் நடைபெறும். அதே போல் அக்டோபர் மாத இறுதிக்குள், தமிழ்நாட்டில் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க:நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி