சென்னை:இயக்குநர் அஹமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் திரைப்படம் செப். 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
வாமனன், என்னென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இறைவன் படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் இறைவன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது நேற்று (செப். 24) சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, நரேன், அழகம் பெருமாள், நடிகை விஜயலட்சுமி, இயக்குனர் அஹமது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினரான நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ரசிகர்கள் லவ் யூ என்று கத்திய நிலையில், அன்பை வெளிப்படுத்த தாமதப்படுத்தாமல் உடனே வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறி ரசிகர்களுக்கு லவ் யூ என்றார். தொடர்ந்து, விஜய் சேதுபதி பேச தொடங்கிய நிலையில், ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லை எனவும், ஆடியோ சரியாக இல்லை எனவும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், ஆடியோவை மூக்கில் உறிஞ்சிதான் கேட்க வேண்டியதாக இருக்கிறது எனக்கூறி ஸ்பீக்கரை சரி செய்ய சொன்னார்.
ஆனால், தொடர்ந்து ரசிகர்கள் கூச்சலிட்டதால் "நிகழ்ச்சியை நடத்தவா வேணாமா" எனக் கேட்டார். மேலும், பேசிய அவர், "நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி பெரிய ஹீரோ. நான் நடித்த முதல் படத்திற்கு 250 ரூபாயும், இரண்டாவது படத்திற்கு 400 ரூபாயும் சம்பளம் வாங்கினேன்" என்றார்.