சென்னை: கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல முன்னெச்ரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. கரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்குப்படுகிறதா? ஊரடங்கை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது ஆய்வு நடத்தியும் ஆலோசனை மேற்கொண்டும் வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம் இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டங்களில் ஆய்வு செய்துவருகிறார். இந்நிலையில், அவர் ஆய்வின்போது ஆடம்பர உணவுகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
அதில், “தான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே, அவர் அரசு விழாக்களில் தான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக வழங்கக் கூடாது. அது சுய விளம்பரமாக பார்க்கக்கூடும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.