சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக அறிவு சார்ந்த காப்புரிமை பிரிவு (IPRC) தொடங்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவம் சார்ந்த அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெற விண்ணப்பிக்கலாம் எனத் துணைவேந்தர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அறிவு சார்ந்த காப்புரிமை (IPRC) என்பது புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்புகளைப் பாதுகாக்கும் சட்ட உரிமையைக் கொண்டதாகும். மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரத்தைப் பெற்றிடும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்பினை பெற்றுள்ள மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் துறைசார்ந்த புதிய பல கண்டுபிடிப்புகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றிடும் வகையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதன் முறையாக அறிவு சார்ந்த காப்புரிமை பிரிவு (Intellectual Property Right Cell) TNSTSC மற்றும் TIFAC ஆகியோரின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.