தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CSK vs MI: அதிரும் சேப்பாக்கம்.. அசத்துமா சிஎஸ்கே? பழித்தீர்க்க காத்திருக்கும் மும்பை! - dhoni team

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் Rivalry week போட்டிகள் தொடங்குகின்றன. பிற்பகலில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

Today IPL MATCH
இன்றைய ஐபிஎல்

By

Published : May 6, 2023, 2:15 PM IST

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (மே 6) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 11 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

சென்னை vs மும்பை

'மஞ்சள் படை' எப்படி?:சொந்த மண்ணில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகவே இருந்தாலும், கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி சென்னையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. கான்வே, கெய்க்வாட், ரஹானே, கேப்டன் தோனி, துபே ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும் பந்துவீச்சில் சென்னை அணி எழுச்சி பெற வேண்டியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பந்துவீச்சாளர் தீபக் சாஹர், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துஷார் தேஷ்பாண்டே விக்கெட்களை சாய்த்தாலும், டெத் ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்கிறார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இன்றைய போட்டியில் விளையாடுவது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

பழித்தீர்க்குமா மும்பை?: நடப்பு சீசனில் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி, அதன் பிறகு சுதாரித்து விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் 200 ரன்களை சேசிங் செய்த மும்பை, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த சில போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் குவிக்க தவறினாலும், இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது மும்பை அணியின் பிளஸ். பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம். சென்னை அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஆஃப் ஸ்பின்னர் ஹிருத்திக் ஷோகீனை, மும்பை அணி களம் இறக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியிருந்தது. அதற்கு பழித்தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் மும்பை அணி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டம் எங்கே?:சென்னை - மும்பை அணிகள் மோதும் லீக் ஆட்டம், பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

சென்னை உத்தேச அணி:டேவிட் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், தீக்சனா, பதிரானா, துஷார் தேஷ்பாண்டே.

மும்பை உத்தேச அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோகீன், ஆகாஷ் மத்வால்/அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா.

டெல்லி vs பெங்களூரு

மற்றொரு ஆட்டம்:ஐபிஎல் தொடரில் இரவு நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பல வியூகங்களை வகுத்தும் எடுபடவில்லை. அதேநேரம் கடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

கேப்டன் வார்னர் தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும், அதன்பிறகு ரன் சேர்க்க தடுமாறுகிறார். பில் சால்ட், கார்க், ரோசோவ், மணீஷ் பாண்டே ஆகியோர் நிலைத்து நின்று விளையாட தவறுகின்றனர். அக்சர் படேல், ஹகீம் கான் ஆறுதல் தருகின்றனர். பந்துவீச்சில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா நம்பிக்கை தருகிறார். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டால் தான் பெங்களூரு அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும், டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி மற்றும் லக்னோ அணி ஆலோசகர் கம்பீர் ஆகியோருடன் ஏற்பட்டுள்ள உரசல் பரபரப்பை கூட்டியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். டேவிட் வில்லிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள கேதர் ஜாதவ் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹேசில்வுட், கரண் சர்மா டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

போட்டி எங்கே?:இரு அணிகள் மோதும் லீக் ஆட்டம், இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

டெல்லி உத்தேச அணி:பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ்/ரோசோவ், ப்ரியம் கார்க்/யஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் கான், ரிபல் படேல், நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

பெங்களூரு உத்தேச அணி:விராட் கோலி, டு பிளெஸ்ஸி (கேப்டன்), மேக்ஸ்வெல், பிரபுதேசாய், அனுஜ் ராவத்/கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), லோம்ரோர், ஹசரங்கா, கரண் சர்மா, சிராஜ், ஹேசில்வுட், ஹர்ஷல் படேல்/வைசாக்.

ABOUT THE AUTHOR

...view details