சென்னை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தொடக்க விழா, ஜன.22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும், ஜனவரி 22ஆம் தேதி அன்று, நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்திருந்த பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தான் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் மேலும், ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ராமர் கோயிலை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 44 சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படவுள்ளன. ஜனவரி 25ஆம் தேதிக்கு பின் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மக்களவை தொகுதியிலிருந்தும், சுமார் 10 ஆயிரம் பேரை அயோத்திக்கு அழைத்து வர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி தமிழகத்தில் யார் யாருக்கு அழைப்பிதழ்?அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை சார்பில், சென்னையில் உள்ள அமீர் மஹாலில் உள்ள ஆற்காடு வம்சத்தினரைச் சேர்ந்த நவாப் முகம்மது அப்துல் அலி மகன் ஆசிப் அலிக்கு, ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கலைத் துறையினர்களான ரஜினிகாந்த், குஷ்பு, ராகவா லாரன்ஸ், சந்தானபாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ராமர் கோயிலுக்கான அழைப்பிதழ் வழங்குவதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு: கடந்த 1990ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மதகொண்டப்பள்ளியில் ஸ்ரீ ராம ஜோதி ஊர்வலம் நடைபெற்றது. சிறிது நேரத்தில் அந்த ஊர்வலம் கலவரமாக மாறியதைத் தொடா்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த நரசிம்மைய்யா, பாபு, சங்கர், ராஜா ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர்.
தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு, மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரைக் கௌரவிக்கும் வகையில், அவர்களை கோயில் திறப்பு விழாவுக்கு வருமாறு ஸ்ரீ ராம ஜென்மபூமி க்ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து இந்து முன்னனி சார்பில் செய்யபட்ட முன்னேற்பாடுகள் குறித்து, அதன் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் அனைத்து இந்து அமைப்பினர் சேர்ந்து, முக்கிய பிரமுகர்கள் வீட்டில் அழைப்பிதழ் மற்றும் அயோத்தி ராமர் பிரசாதம் வழங்கபட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி அன்று, அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இதனை நேரலை செய்யவும் மற்றும் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் இந்து முன்னனி சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
ராகவா லாரன்ஸ்க்கு அழைப்பிதழ் இதைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், “ராம ஜென்ம இயக்கத்தில், இந்து மக்கள் கட்சி தொடக்க காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ராமர் கோயில் வர வேண்டுமென இந்து மக்கள் கட்சி தொடர்ந்து பல முயற்சிகள் செய்தது.
ராமாயாணத்திலே ராமர் தமிழகத்தில் பல கோயில்களுக்குச் சென்றுள்ளார். அதில் ஒன்று ராமேஸ்வரம். சங்க காலத்தில் இருந்தே ராமர் பற்றி குறிப்புகள் அதிக அளவில் இருக்கிறது. ராமர் குடும்பத்தின் குல தெய்வம் ஸ்ரீரங்கம்தான். ராமருக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து பல தொடர்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
மேலும், இந்த அயோத்தி ராமர் விழாவிற்காக தமிழகத்தில் அனைத்து இல்லத்திலும் விளக்குகள் ஏற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், வீடு வீடாக அழைப்பிதழ் அளித்து வருகிறோம். மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் ராமர் படத்தை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த உள்ளோம். ராமர் கோயில் கும்பாபிஷேகம் என்பது, இந்தியாவின் கனவல்ல, உலக இந்து மக்களின் பெரும்கனவு ஆகும்.
அயோத்தியில் நடைபெறவுள்ள விழாவில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சைவ மடாதிபதி முதல் ரஜினிகாந்த், தேன்கனிக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள். மேலும், ஜனவரி 22ஆம் தேதி அன்று, இந்து முன்னனி சார்பில், சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!