தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ரூ.818.90 கோடியில் முதலீடு... 6 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

cm stalin
முதல்வர் ஸ்டாலின்

By

Published : May 29, 2023, 6:12 PM IST

சென்னை:2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.

டோக்கியோ நகரில் இன்று (மே 29) காலை ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தங்களின் விவரம் வருமாறு:

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் புதிய ஆலை நிறுவ ஒப்பந்தம்.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டம்.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம்.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைத்தல்

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுதல்.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை அமைத்தல்.

மொத்தம் ரூ.818.90 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்தின் தலைவர் சடோஷி ஒகோமோட்டோ, மிட்சுபா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கோஜி மிசுனோ, ஷிமிசு நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஹிடோஷி இசாவா, துணை இயக்குநர் மட்சுனாகா கசுநோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details