சென்னை: பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான கையேட்டை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். பின்னர் கையேட்டு பிரதிகளை 10 ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில அரசின் நிதியில் 1,000 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டம் கிராமபுர மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அமைந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக டீசல் கட்டணம் உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் புதிய திட்டங்களை அறிவித்து இருப்பது போக்குவரத்து துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக உள்ளது. அதேபோல் ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு உதவியாக இன்றைய தினம் கையேடு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.