சென்னை: மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan) இயந்திரங்களின் மூலம் பெறப்படும் தகவல்களைத் துல்லியமாகவும், இந்தியாவில் குறைந்தவிலையில் தயார் செய்யும் தொழில் நுட்பத்தையும் சென்னை ஐஐடி அப்ளைட்டு மெக்கானிக்கல் துறையின் பேராசிரியர் அருண் கே.திட்டை கண்டுபிடித்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பை மருத்துவத்துறைக்கு ஏற்ற கருவியாக வடிவமைத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மனித உடலில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்காக மருத்துவத்துறையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளை ஆராய்வதற்கும் நோய்களைக் கணிப்பதற்கும் இது பெரிதும் உதவுகிறது.
ஒளியின் மூலம் கணிப்பு
இந்த புதிய இயந்திரம் மூலம் இரு பாலினத்தவருக்கும் கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய உறுப்புகளின் தன்மையை அறியலாம்.
குடல்வால் அழற்சி, குடல் கட்டிகள், குடல் புற்றுநோய், வயிற்றில் தேங்கும் நீர், கல்லீரல் வீக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் சுருக்கம், மண்ணீரல் வீக்கம், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள், பித்தக் குழாய் அடைப்பு உள்ளிட்ட நோய்களை அதன் ஒளியின் மூலம் கணித்துத் தருகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்துவதில்லை என்பதால், இதில் கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை. எக்ஸ்ரே படத்தில் காண முடியாத பல நோய்களை இதில் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை மிகவும் எளிதான, வலி இல்லாத, பக்கவிளைவு எதுவும் இல்லாத அளவில் இருப்பதோடு, குறைந்த செலவில் விரைவாக செய்யப்படுகிறது.
இந்தியாவில் தயாரித்து விற்பனை
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை வாங்கி இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்த இயந்திரங்களின் விலையும் மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் சென்னை ஐஐடியின் அப்ளைட் மெக்கானிக்கல் (பயோமெடிக்கல்) துறையின் பேராசிரியர் அருண் கே.திட்டை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை வடிவமைப்பதற்கான தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம். இந்தியாவில் முழுவதும் தயார் செய்யும் வகையில் மூலப் பொருள்களை பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் இருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இந்தியாவில் முழுவதும் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்தியாவில் முழுவதுமாக ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்து தயார் செய்துள்ளோம்.
ஃபிரேம் ரேட்
தற்பொழுது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்களில் இருந்து புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளோம்.
மருத்துவர்கள் நோய்ப் பாதிப்பைக் கண்டறிவதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து பரிசோதனை செய்யும் போது, அந்தப் பகுதி மட்டும் நன்றாகத் தெரியும். ஆனால், தற்பொழுது நாங்கள் கண்டறிந்துள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை செய்தால் அனைத்தும் தெளிவாகத் தெரியும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தும்போது மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் காண்பிக்கிறது.