சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளிக்கல்வித்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட EMIS மூலம் பல்வேறு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில், “மாணவர்களின் விவரங்கள், வருகை பதிவேடு உள்ளிட்டவை பெறப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் உடல் சார்ந்த பல்வேறு தகவல்களும் பெறப்பட்டு வருகிறது.
இதில் மாணவர்களின் உயரம், எடை, கண் பார்வை, உடல் நிலை பாதிப்பு உள்ளிட்ட 40 கேள்விகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும். இதனை பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம் மேலும் பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் மற்றும் அவர்களின் திறனை கண்டறிவதற்கு புதிதாக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியை இனி கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் உடல் தகுதி, அவர்களின் விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டியில் வெற்றி - தோல்வி ஆகியவற்றை இனி செயலியில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பதிவிட வேண்டும். செயலியில் பதிவாகும் விவரங்களை கண்டறிந்து அதன் மூலம் தகுதியான மாணவர்களுக்கு, மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்களை எவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும், கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊதியத்திற்கு மட்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வேலை செய்யக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்