சென்னை:புது வண்ணாரப்பேட்டையில் ’மெத்தம்பெடைமைன்(methamphetamine)’ போதைப் பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்தத் தகவலின் பேரில் கடந்த மார்ச் 8ஆம் தேதி காதர்மைதீன், நாகூர் அனிபா, ஷேக் முகமது, வெங்கட ரெட்டி, மணிகண்டன் உள்ளிட்ட போதைபொருள் விற்பனை கும்பலை, சென்னை வடக்குமண்டல இணை ஆணையர் ரம்யா பாரதியின் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
போதைப்பொருள் கும்பலைப் பிடிக்கத் திட்டம்
அவர்களிடமிருந்து 1 கிலோ 10 கிராம் மெத்தபெடைமைன் போதை பொருளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த கும்பலுடன் மெத்தம்பெடைமைன் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தத் தொழிற்சாலையை ஆந்திராவிற்கு சென்று அழித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட போதை கும்பலுடன் தொடர்புடைய ஜெயின் அலாவூதினைத் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் எருக்கஞ்சேரி லட்சுமி அம்மன் நகரில், அலாவூதின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று அவரது வீட்டை சோதனையிட்டபோது அக்குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகி இருப்பதும், அவரது உறவினர் வீடான கொடுங்கையூர் வடிவுடையம்மன் கோயில் தெருவில் பதுங்கி இருப்பதும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
அங்கு கைது செய்ய காவல்துறையினர் விரைந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. உறவினரின் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் தேடிய போது, அலாவூதினின் மகன்களான ஜாஹீர் ஹுசைன்(24) மற்றும் அஜீஸ்(27) ஆகியோரை, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிட்டதாகவும், காவல்துறை எனக்கூறி காரில் கடத்திச்சென்ற அந்த கும்பல் சிலமணி நேரத்தில் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அலாவுதீன் மனைவியிடம் ரூ.20 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என பேரம் பேசியதாகவும், அவர்களின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை இணை ஆணையருக்குத் தகவல் தெரிவித்தனர்.
செல்போன் சுவிட்ச் ஆஃப்-ஆல் சிக்கல்
உடனடியாக அந்தக் கும்பலைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்ததின்பேரில், கடத்திய கும்பல் தொடர்பு கொண்ட எண்ணை ஆய்வு செய்தபோது, போலியான முகவரியைக் கொடுத்து சிம் கார்டு வாங்கியதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் அவர்களை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் அந்த கும்பல் தொடர்பு கொண்டபொழுது காவல் துறையினரின் திட்டத்தின் படி, அலாவூதினின் மனைவி தன்னிடம் ரூ.20 லட்சம் பணம் இல்லை என்றும்; ரூ.6 லட்சம் பணம் தான் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த உரையாடலின்பேரில் பணத்துடன் முல்லை நகர் பகுதிக்கு வர சொல்லி கடத்தல் கும்பல் தெரிவித்துள்ளனர். பின்னர் பணப்பையுடன் , கடத்தல் கும்பல் சொல்லிய இடத்திற்குச் சென்ற பொழுது பின் தொடர்ந்து வந்த தனிப்படை காவல் துறையினர் சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு கடத்தல்காரர்களை கைது செய்தனர். மீதமுள்ள நபர்கள் தப்பியோடி விட்டனர்.