மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ’’சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி, மத வெறி அரசியலை வளர்க்கின்ற பாஜக, அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவை மே 17 இயக்கம் முற்றிலுமாக நிராகரிக்கும்.
மேலும், பெட்ரோல், டீசல் மூலமாக கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வரியை மத்திய அரசு ஈட்டியுள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரிப்பங்கை இதுவரை வழங்க மறுக்கிறது" எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஏழைகளின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி எட்டு வழிச்சாலை, நான்கு வழிச்சாலை கட்டியுள்ளதாகவும், அதேபோல் மீனவர்களின் நிலத்தைப் பிடுங்கி தனியார் நிறுவனங்களுக்கு அதிமுக, பாஜக அரசு விற்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், "சீர்மிகு நகரம் ஒன்றை உருவாக்கி குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றம் போன்ற பணிகளைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி வரி வசூல் செய்துவருகிறது. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய மானியத்தில் 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை குறைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படாமல் இருப்பதால் பாஜக, அதிமுக அரசை மக்கள் புறக்கணித்து அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைய வைக்க வேண்டும்.
'அதிமுக, பாஜகவை அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைய வைக்க வேண்டும்' மக்களுக்காகப் போராடுகிற மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், தவாக, ஆதித் தமிழர் பேரவை போன்ற கட்சிகளுக்கு மே 17 இயக்கம் ஆதரவு அளிக்க முடிவுசெய்துள்ளது. இந்தக் கட்சிகளுக்காகப் பரப்புரை செய்யவுள்ளோம்’’ எனக் கூறினார்.
இதனையும் படிங்க:18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு